முன்பிள்ளை பருவ அபிவிருத்தி தொடர்பில் தேசிய கொள்கையை உருவாக்க திட்டம்
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி தொடர்பாக தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கான முதல் சுற்று கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகாரிகளும் இதில் கலந்துக்கொண்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிறுவனங்களையும் ஒரே கொள்கையின் கீழ் செயற்படுத்துவதற்கு தேவையான கொள்கையை தயாரித்து, ஒன்றிணைந்த கொள்கையாக முன்வைத்து அமைச்சரவையில் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்த வருடத்தில் ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் தரங்களுக்காக புதிய கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த முன்பிள்ளை பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.