பேரிடரில் பணியாற்றி விபத்தில் பலியான விமானி ; காரணம் வெளியானது
வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில நீதிவான் முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக் கோளாறு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வென்னப்புவவுக்கு மேலே உலங்கு வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது, கிங் ஓயா பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், கைகளை அசைத்து உதவி கோரியதாகத் துணை விமானி தெரிவித்தார்.
எனினும், அங்கு அதிகளவான மக்கள் கூடியிருந்தமை மற்றும் உயர் சக்தி மின் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்ததால், பாலத்தின் மீதோ அல்லது வீதியிலோ உலங்கு வானூர்தியைத் தரையிறக்க முடியவில்லை.
அவர் பொருத்தமான இடத்தில் தரையிறக்க முயன்றபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக, உயிரிழந்த பிரதான விமானி மற்றும் தமக்கு உணர முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். உலங்கு வானூர்தியைத் திருப்பிய மறுகணமே, அது கிங் ஓயாவுக்குள் திடீரென வீழ்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.