பாடசாலை மாணவிகளிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர்
இந்தியாவில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரச பாடசாலை மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இப்பள்ளியில் கீழ்பெரும்பாக்கம், காகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் (48 வயது) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிவபாலன், உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த முறைபாட்டை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
