இலங்கை மருந்துவத் துறையில் எழுச்சி ; அரச நிறுவனம் படைத்த வரலாற்று சாதனை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை உற்பத்தி செய்ய இக்கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளது.

அந்த மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதல் முறையாக, மருத்துவ வழங்கல் பிரிவினால் வழங்கப்பட்ட அனைத்து முன்பதிவுகளையும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் 05 புதிய வகை மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேநேரம் 2025 ஆம் ஆண்டில் இக்கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.