காதலை ஏற்க மறுத்ததால் யுவதி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழ்நாடு மாநிலம், கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் காதலை நிராகரித்த பெண்ணின் வீட்டின் மீது வாலிபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட வாலிபர், இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அந்தப் பெண் வாலிபரின் காதலை ஏற்க மறுத்துத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், நள்ளிரவு நேரத்தில் அப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தலைமறைவாகியுள்ள வாலிபர்
அங்கு, தான் முன்கூட்டியே தயாரித்து எடுத்து வந்த பெட்ரோல் குண்டை (Petrol Bomb) திடீரென வீட்டின் நுழைவாயில் பகுதியை நோக்கி வீசி எறிந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியதும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முர்ஐப்பாட்டின் பேரில், தொண்டாமுத்தூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.