யாழ். பல்கலை துணைவேந்தருக்கு எதிராக கொழும்பில் மனு தாக்கல்
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவர் மீதும் கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வகுப்புத் தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் என்பவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் மேற்படி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாடு, பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் தகாத நடத்தை தொடர்பில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.