முன்னாள் மதுவரி ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணை மே மாதத்தில்
முன்னாள் மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் அர்ச்சுனா ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற மதுபான உரிமையாளர்கள் சங்கத்தால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இரண்டு தரப்பினர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் குறித்த மனுமீதான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு நீதிமன்றில் கால அவகாசம் கோரியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர், சட்டத்துக்கு முரணாக மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 39 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.