ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் விபரீத முடிவு; பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு வீட்டிற்குள்ளும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பிணமாக இருந்துள்ளனர்.
ஒரு வீட்டில் பிணமாக கிடந்தவர்கள் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா, அவரது தாய் அக்தை, மனைவி ரேகா, மகள் பிரதிமா, மகன் ஆதித்யா, மருமகன் சுபம் எனவும், மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தவர்கள் ஆசிரியர் போபட், அவரது மனைவி அர்ச்சனா, மகள் சங்கீத் எனவும் தெரியவந்தது. இதில் 3 பேர் ஒரே இடத்தில் மற்றவர்கள் வீட்டில் ஆங்காங்கே பிணமாக கிடந்தனர்.
உடலை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் இருவரின் வீடுகளிலிருந்தும் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இதற்கான சரியான காரணத்தை கூற முடியும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த குடும்பத்தினர் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்த விபரீதம் முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.