சிவராத்திரிக்கு ஆலயம் சென்றவரை துரத்தி கையை வெட்டிய கும்பல்
சிவராத்திரி பூஜைக்கு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று, அங்கு வணங்கிவிட்டு, ஓட்டோவில் வீடு திரும்பிய ஒருவரின் கை சிலரால் துண்டாக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை- புவக்கொடமுல்லவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்ரே தாக்குதலுக்குள்ளான நிலையில் , பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் உடுவர தோட்டத்தில் ஒன்றாக வசித்த போது, இருவருக்குமிடையில் நீண்டகால பகையால், காயமடைந்த நபர், புவக்கொடமுல்ல பகுதிக்கு வசிக்க சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரொக்கில் காளி கோவிலில் சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில், ஓட்டோவில் வருகைத் தந்த ஐவரடங்கிய குழுவினர் அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓட்டோவிலிருந்து இறங்கிய ஓடிய அவர், 300 மீற்றர் தூரம் வரை ஓடியபோது, சந்தேகநபர்கள் துரத்தி பிடிக்கப்பட்டு கையை வெட்டி துண்டாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பதுளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.