பரீட்சை விடைத்தாள்களைக் கொண்டு சென்ற வேனை வழிமறித்த நபர்; விசாரணைகள் ஆரம்பம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களுடன் ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்குப் பயணித்த வேன் ஒன்றை வழிமறித்த சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில் பதிவாகியுள்ளது.
வேனில் பயணித்த பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி மற்றும் உப பொறுப்பதிகாரிக்கும், நேற்று பிற்பகல் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
நோர்வூட், புளியாவத்தை பரீட்சை நிலையத்தில் நேற்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர், ஸ்ரீபாத கல்லூரியில் உள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு விடைத்தாள்களை எடுத்துச் சென்ற போது முச்சக்கர வண்டி ஓட்டுநர் வாகனத்தை வழிமறித்துள்ளார்.
வீதியை மறித்து நின்ற முச்சக்கர வண்டியை மோதாமல் வேன் முன்னோக்கிச் சென்றபோதிலும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் 500 மீட்டர் தூரம்வரை வேனைப் பின் தொடர்ந்துள்ளார்.
இதனால் மண்டப பொறுப்பதிகாரி நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில், குறித்த முச்சக்கர வண்டி சாரதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர் புளியாவத்தை தமிழ்ப் பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும், கைது செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.