கொழும்பு ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க - கொழும்பு வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.

அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு
உணவகத்தின் மேல் தளத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகச் சீதுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் அந்த உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போயகனே, இசுருபெதெச, 3வது லேனைச் சேர்ந்த 48 வயதுடைய வீரசிங்க முதியன்சேலாகே பிரதீப் பிரியசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (15) வேலையை முடித்த பிறகு அவர் உணவகத்தின் மேல் மாடியில் தனது அறையில் இருந்ததாகவும், உணவகத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு ஊழியர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறந்தவருக்கும் அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஒன்று ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த மரணம் நிகழ்ந்த சரியான விதமும் அதற்கான காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.