ரணிலை FR மனுவில் பிரதிவாதியாக பெயரிட அனுமதி
கடந்த ஆட்சி காலத்தின் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாயவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (27) அழைக்கப்பட்டிருந்தது.
குறித்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடும் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்கிய நீதியரசர்கள் அமர்வு, மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் வெற்றிடமாக இருந்த போதும், நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாயவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.