தென்னிலங்கை மாணவர்களுக்கு ஒரு நியாயம் வட கிழக்குக்கு ஒரு நியாயமா?
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கிராமத்தில் இன்றைய தினம் க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியதாக சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நவம்பர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் பாதகமான காலநிலை காணப்படுமென்றும் அந்நாட்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென்றும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
எதிர்பார்ப்புக்கிணங்க இன்றைய தினம் காலநிலை மிக மோசமாவே பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் உயர்தர பரீட்சை முன்கூட்டியே ஒத்திவைக்கப்படவில்லை, தென்னிலங்கை பகுதிகளில் சிறிலங்கா பாதுகாப்பு படைத்தரப்பினரின் கவச வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் மாணவர்களை பரீட்சை நடைபெறுகின்ற நிலையங்களுக்கு ஏற்றிச்சென்ற காட்சிகளையும் ஊடகங்களில் அவதானிக்க முடிந்தது.
ஆனாலும் வடக்கு மாகாணத்தில் அவ்வாறான ஏற்றியிறக்கும் செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பிரதேசங்களில் போக்குவரத்து சீரின்மையால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
குறிப்பாக நெடுந்தீவு, நயினாதீவு பிரதேசங்களிலிருந்து படகுப் போக்குவரத்து இடம்பெறாத காரணத்தினாலும், காலநிலை சீர்கேட்டின் காரணமாகவும் பேருந்து போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.
இதன் காரணமாக புங்குடுதீவு பிரதேசத்திலிருந்து வேலணை மத்திய கல்லூரிக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்காக சென்ற பல மாணவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். புங்குடுதீவு கிராமத்தில் ஓர் மத்திய கல்லூரியும் ஏனைய 9 இடைநிலை, ஆரம்ப பாடசாலைகளும் இயங்கி வருகின்றன.
ஆனாலும் க. பொ. த. உயர்தர பரீட்சை எழுதுவதாயின் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் பயணித்தே வேலணை மத்திய கல்லூரிக்கு செல்லவேண்டியுள்ளது.
அதிலும் வேலணை மத்திய கல்லூரியின் ஊடாக பேருந்து போக்குவரத்து சேவையை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.
ஆனாலும் அம்மாணவர்களை ஏற்றியிறக்க கூடிய எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்காதமையால் அம்மாணவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு வாகன உதவிகளை பெற்றிருந்ததாகவும் தனிப்பட்ட ரீதியாக தகுந்த நேரத்தில் அந்த உதவியை செய்யக்கூடியதாக இருந்தாலும் எமது மாணவர்கள் மீது மத்திய அரசு காட்டுகின்ற பிரிவினை அல்லது அக்கறையின்மை தொடர்பாக கவலை கொள்வதாகவும் திரு. கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்