ஆர்ப்பாட்டங்களை நடத்த 6 மணி நேரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும்-பதில் பாதுகாப்பு அமைச்சர்
கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டிற்குள் குழப்பமான நிலைமை உருவாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் எதிர்ப்புகளை சட்ட ரீதியாக தடுக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இனிவரும் காலங்களிலும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புகளை வெளியிட மக்களுக்கு இருக்கும் உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அதேபோல் அந்த உரிமைகளை நாங்கள் மதிக்கின்றோம்.
எனினும் எந்த ஆர்ப்பாட்டமோ, பேரணியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளோ, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், பொருளாதாரத்திற்கும் தடையாக இருக்கக்கூடாது. நாட்டின் சட்டத்திற்கு அமைய ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்பு நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பினரிடம் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் சட்டத்தை மதித்து நடத்தப்படுபவை அல்ல
தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இந்த சட்டத்தை மதித்து நடத்தப்படுபவை அல்ல. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதியை பெற்றுக்கொண்டால் எந்த சிக்கலும் பிரச்சினையும் இருக்காது என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.
எந்த நிலைமையாக இருந்தாலும் நாட்டின் பொது அமைதிக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி, மக்களுக்கு தடையேற்படும் வகையில் பொறுப்பின்றி நடந்துக்கொள்ள எந்த தரப்புக்கும் இடமளிக்க முடியாது.
இது சம்பந்தமாக அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறு செயற்படவில்லை என்றால், இதற்கு முன்னர் நாட்டில் அனுபவித்த அராஜகமான பயமுறுத்தும் சூழ்நிலை நாட்டில் உருவாகும்.
அரச மற்றும் தனியார் சொத்துக்களை அழிக்கும், உயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத சம்பவங்கள் மீண்டும் ஏற்படும். இப்படியான நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட எம்மால் இடமளிக்க முடியாது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் சட்டவிரோதமாக செயற்படும் நபர்களுக்கே பிரச்சினை
சில அணிகள் தமது நோக்கங்களை அநீதியாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுக்க சட்டத்திற்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள், பொறுப்புக் கூறும் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே ஜனாதிபதி அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எவரும் வழமை போல் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். சட்டத்திற்கு விரோதமாக செயற்படும் நபர்களுக்கு மட்டுமே பிரச்சினை ஏற்படும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.