பேராதனை பல்கலைக்கழத்தில் மட்டக்களப்பு மாணவன் விபரீத முடிவு
பேராதனை பல்கலைக்கழகத்தில் சுகாதார பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் உயிர்மாய்க்க முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் நேற்று இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அம் மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம் மாணவன் விபரீத முடிவெடுத்து போது கீழே விழுந்து காயமடைந்த நிலையில் மாணவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபரீத முடிவினை மேற்கொண்டுள்ள மாணவன்
மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவரே இந்த விபரீத முடிவினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம் மாணவன் நேற்றிரவு ஏனைய மாணவர்களுடன் இரவு உணவு உண்பதற்காக வெளியில் செல்லாத நிலையில் நண்பர்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து அறை கதவினை தட்டி உள்ளனர்.
அம் மாணவன் திறக்காத காரணத்தினால் அருகில் உள்ள ஜன்னல்கள் வழியாக அறைக்குள் நுழைந்து தேடியபோது மாணவன் தரையில் காயமடைந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் புதிய மாணவர்களை இணையத்தில் ஆபாசமான காட்சிகளைக் காட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களில் இந்த மாணவரும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.
துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நான்கு மாணவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் விசாரணையை எதிர்கொள்ள மூன்று மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர்.
இருப்பினும் இம் மாணவன் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.