உயிரை பணயம் வைத்து கம்பிகள் மீது நடக்கும் மக்கள்; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தருவதில் மலையக மக்களின் பங்களிப்பு நிறையவே உள்ளது. மலையகம் , பெருந்தோட்டப் பகுதிகள் என்றாலே பச்சை பசும் தேயிலை மலைகள், நீண்ட இறப்பர் மரங்கள் என எழில் கொஞ்சும் இயற்கை அழகும் தாவி பாயும் நீர்வீழ்ச்சிகளுமே ஞாபகத்திற்கு வரும்.
ஆனால் அங்கு வாழும் மக்கள் பலர் அடிப்படை வசதிகள் கூட இன்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வரும் அவலநிலை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே மலையகம் வாழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அன்றாட தொழிலுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் மஸ்கெலியா - சாமிமலை கவரவில தோட்டத்தில் வாழும் தொழிலாளர்கள் தினமும் தேயிலை கொழுந்து கூடையையும் சுமந்து , ஒற்றை கம்பியைக் கொண்ட ஆபத்தான பாலத்தில் பயணித்து உயிரை பணயம் வைத்து தொழிலுக்குச் செல்கின்றனர். அங்குள்ள கவரவில தோட்ட தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான முறையில் இந்த பாலத்தில் நடந்து செல்கின்றனர்.

குறித்த பாலம் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. எனினும் இதனை தினமும் பல தொழிலாளர்கள் , பாடசாலை மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆபத்தான பாலத்தை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகள், தோட்டநிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பலரிடம் முறையிட்ட போதும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழைக் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்த பாலத்தில் பயணித்தோர் கால் இடரி ஆற்றில் விழுந்து படுகாயமடைந்துள்ளதாகவும் , அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். வெயில் காலங்களில் பாலத்தினூடாக ஆற்றை கடந்து செல்கின்ற போதும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்த கம்பியின் ஊடாகவே நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த பாலத்தினூடாக கடக்கும் தூரத்தை பிரதான வீதியூடாக கடக்க முற்படும் போது நேரம் விரயமாகும் என்பதுடன், தொழிலுக்கும் தமது பிள்ளைகளுக்கு பாடசாலைகளுக்கும் செல்வதில் தாமதம் ஏற்படும் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தம்மை ஆபத்தான பயணத்தில் இருந்து காக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை நகரங்களில் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கும் அரசாங்கம், தமது ஆபத்தான வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.