கோப்பாய் பொலிஸாரை கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய நபர்கள்!
யாழில் கோப்பாய் பொலிஸாரை வீதியில் கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றைய தினம் (28-04-2023) மாலை உரும்பிராய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் சந்தியில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.
அதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் பாரப்படுத்ததாது வெளியில் எடுப்பதற்கு பல மட்டங்கள் ஊடாக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த நபர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.