ஊரடங்கு சட்டத்தால் கொழும்பில் தவிக்கும் மக்கள் (Photos)
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையினால் குறிப்பாக பொதுபோக்குவரத்துகளில் அதன் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
தமது அன்றாடத் தொழிலை மேற்கொள்வதற்கும், பணிக்குச் செல்வதற்கும் பொது போக்குவரத்தினை நம்பியிருப்பவர்கள் கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், தொழிலுக்காக, பல்வேறுத் தேவைகளுக்காக கொழும்பை நோக்கி வந்தவர்கள் தற்போது கொழும்பில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடருந்து நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பல நாட்களாக பொதுமக்கள் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
கடந்த சில தினங்களாக ஓரிரண்டு பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்த மக்கள் இன்றைய தினம் (08-07-2022) கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
பேருந்துகள் இன்மையால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், நாளைய தினம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் காரணமாக இன்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பொதுமக்களின் நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது.