யாழிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி ஆரம்பம்!
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இறுதிநாளாகும். இந்நிலையில் யாழ் வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வல்வெட்டி துறை அம்மன் கோயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
"தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கிகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் இந்த ஊர்திப் பவனி நேற்றுப் பயணித்தது.
இந்த ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.





