மீண்டும் நாடளாவிய ரீதியில்எரிபொருள் தட்டுப்பாடா? பதற்றத்தில் மக்கள்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப பாரிய வாகன வரிசைகள் காணகூடியதாக உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளை முதல் எரிபொருளுக்கு வழங்கப்படும் 3% கழிவை இரத்து செய்யத் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே எரிபொருள் கொள்வனவு கட்டளை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்திருந்தது.
நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் 3% கழிவை இரத்து செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்தது.
எனினும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், வழமைபோல் கொள்வனவு கட்டளைகள் பெறப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் வழமை போல் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாதாந்த விலை திருத்தத்திற்கு ஏற்ப மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.