பண்டிகைக்காக குவிந்த மக்கள்! தீபாவளி கொத்தணி உருவாகுமா?
நாளையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதனால் வியாபாரம் களைகட்டியது. அதன்படி அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புசல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது.
சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதால் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்கள் இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பியதனால் பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, நகர்பகுதிகளுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முறையாக முகக்கவசம் அணியவில்லை என்பதுடன் , சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. அத்துடன் பெரும்பாலான கடைகளுக்கு முன்னால் கைககளை கழுவுவதற்கு எந்தவொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
இதன்காரணமாக கொரோனா தீபாவளி கொத்தணி உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.









