தற்போதைய ஆட்சியில் மக்கள் விரக்தி; சரத் பொன்சேகா
நாட்டின் தற்போதைய ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ள போதும், ஐக்கிய மக்கள் சக்தியை ஒரு மாற்றீடாக இன்னும் மக்கள் பார்க்கவில்லை என அக் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வினைத்திறனான பிரச்சார இயந்திரத்தின் மூலம் விரக்தியடைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அடிமட்ட உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா கூறினார்.
மீரிகமவில் நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொன்சேகா மேலும் தெரிவிக்கையில், ,
ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் தட்டில் வைத்து அரசியல் வெற்றியை பெற்றுக்கொடுக்காத நிலையில் அதனை நோக்கி உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தில் மக்கள் சலிப்படைந்துள்ள போதிலும் அரசாங்கத்தை நடத்தும் திறன் கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் பார்க்கவில்லை. பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களில் 50 வீதமானவர்கள் இன்று விரக்தியடைந்துள்ளனர்.
இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு மாற்று என அவர்கள் நினைக்கவில்லை, எனவே நாங்கள் பிரச்சார இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும். அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக மற்றும் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஊழல்வாதிகளை சிறைக்குள் அனுப்புவதாக உறுதியளித்தது. எனினும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் பொது நிதியையும் கொள்ளையடித்தனர். இலங்கையின் முன்னாள் தலைவர்கள் எயார்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையடித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் எயார்பஸ் நிறுவனத்திற்கு பெரும் தொகையை செலுத்தி அதனை ரத்து செய்தது.
சில நல்லாட்சி அரசாங்க அரசியல்வாதிகள் 20 மில்லியன் டொலர்களை தங்களுடைய பாக்கெட்டுகளில் போட்டதாகவும், அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களே பொறுப்பு எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.