வெள்ளைக் காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்! பகீர் சம்பவம்
மெனிங் சந்தை பகுதியில் வெள்ளைக் காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 42 வயதான எலபடகே பிரதீப் சமந்த குமார எனும் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் மெனிங் சந்தையில் பல பழக் கடைகளுக்கு உரிமையாளராக இருந்தவர்.
குறித்த வர்த்தகர், மெனிங் சந்தை கடைத் தொகுதியிலிருந்து வெளியேறி தனது காரில் ஏற முற்பட்டபோது, வெள்ளை நிறக் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரீ 56 ரக துப்பாக்கி கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது படுகாயமடைந்துள்ள வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படும்போது உயிரிழந்தார்.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
களனிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸின் நேரடி கட்டுப்பாட்டில் பேலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழும், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும், பேலியகொடை – மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரும் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.