கண்டி - கொழும்பு ரயில் பயணிகளுக்கு விசேட பஸ் சேவை
கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயில் பயணிகளுக்காக, நாளை (8) காலை விசேட பஸ்கள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த விசேட பஸ் சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சேவைகள்
அதன்படி, செல்லுபடியாகும் ரயில் பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு அதிகாலை 4, 4.15 மற்றும் 4.30க்கு பிரத்தியேகமாக பஸ் போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட சேவைகள் போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிகமாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்படும் நீண்ட தூரப் பஸ்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பாதைகளான கண்டி, கட்டுகஸ்தோட்டை, கலகெதர, ஹதரலியத்த, ரம்புக்கன, கரண்டுபன, கேகாலை மற்றும் பஸ்யால வழியாக கொழும்புக்கு இயக்கப்படும்.
நீண்ட தூரப் பயணிகளின் போக்குவரத்து பாதுகாப்புக்காக இந்தப் பாதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.