சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் நோயாளர்கள் அசௌகரியம்!
சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பினால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.
சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்றைய தினம் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு வெற்றியளித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் மூலம் தங்களது பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முற்பட்ட போதிலும் அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கமும் நிதியமைச்சும் தங்களது தவறான தீர்மானத்தைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிர்காலத்தில் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வில்லையாயின் சகல சுகாதார தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டி ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.