விமான நிலையத்தில் ஆட்டம்போட்ட பயணிக்கு நேர்ந்த கதி
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை வெள்ளிக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை, துடாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குறித்த பயணி, நேற்றையதினம் (04) காலை ஃப்ளை துபாய் விமானம் FZ-579 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
பயணி கைது
அவர் தனது பயணப் பையில் சட்டவிரோதமாக வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளையும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விஸ்கி பாட்டில்களையும் மறைத்து வைத்திருந்துள்ளார்.
சுங்க அதிகாரிகள் தனது கடமைகளை தொடங்கிய போது, கைப்பற்றப்பட்ட பொருட்களை தரையில் வீசி எறிந்து சுங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இது குறித்து சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 344 இன் கீழ் கடமையை நிறைவேற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.