இடையூறு விளைவித்தால் தண்டனை ; அர்ச்சுனா எம்.பிக்கு நாடாளுமன்றில் எச்சரிக்கை
சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என குழுக்களின் பிரதித் தலைவரான ஹேமாலி வீரசேகர, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நோக்கி எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது.

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, அவரை இவ்வாறு எச்சரித்தார்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது,அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர்.
இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.