பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்ட நாடாளுமன்றம்; முதலில் சென்றது யார் தெரியுமா?
கொவிட் சூழலைக் காரணமாகக் கொண்டு நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு வரையறைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றம் கூடாத தினங்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணி வரை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அதிகளவான கோரிக்கைகள்
கடந்த சில நாட்களாக அதிகளவான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை, பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இதுவரை பல்லைக்கழக மாணவர்கள், அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போன்ற பல்வேறு பிரிவினர் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய இன்று (26) கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவியர் குழு நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகைதந்திருந்தனர்.
நாட்டில் கொவிட் சூழல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த 20ஆம் திகதி தளர்த்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த முதலாவது பாடசாலையாக கொழும்பு மகளிர் கல்லூரி அமைந்தது.
நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த மாணவியருக்குப் பொதுமக்கள் கலரியிலிருந்து சபா மண்டபத்தைப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், சபா மண்டபம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தக் கல்விச் சுற்றலாவின்போது செங்கோல், சபா மண்டபத்துக்கு நுழையும் பகுதியில் உள்ள சித்திரங்கள், நாடாளுமன்றதின் சபை மண்டபத்துக்குள் நுழையும் வெள்ளிக் கதவு போன்றவற்றைப் பார்வையிடுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இணையவழியூடாக விண்ணப்பம்
நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விரும்பும் பாடசாலையின் அதிகாரிகள் இதற்கான விண்ணப்பத்தை கடிதம், தொலைநகல் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.
பல்கலைக்கழகங்களின் மாணவர் குழுக்கள், அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.