கடும் பொருளாதார நிதி நெருக்கடிக்கு மத்தியில் கூடவுள்ள நாடாளுமன்றம்!
கடும் பொருளாதார நிதி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றம் புதன்கிழமை கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படக் கூடும் என கூறப்படுகிறது.
வரலாறு காணாத நிலையில் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிரதமரை தவிா்த்து அனைத்து அமைச்சா்களும் ஈராஜிநாமா செய்தனா்.
அவரது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று அமைச்சா்களும் பதவி விலகினா். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என போர் கொடி தூக்கியுள்ள மக்கள், தொடர்ந்து போராடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிா்க்கட்சிகள் நிராகரித்த பின்னா், 17 புதிய அமைச்சா்களை ஜனாதிபதி நியமித்தாா். அதிலும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு இடமளிக்கப்படவில்லை.
எனினும், பிரதமா் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. எனினும் தாம் பதவி விலக போவதில்லை என்ற முடிவில் திட்டவட்டமாக ஜனாதிபதி கோட்டாபய கூறிய நிலையில் இலங்கை அரசியலில் கடும் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டங்களுக்கும் மத்தியில் இலங்கையில் பாராளுமன்றம் கூட உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் மின் வெட்டு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக, இலங்கை சமீபத்தில் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.