பணத்தை கேட்ட மதுபானசாலை முகாமையாளரை மதுப்போத்தலால் தாக்குதல்!
மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுப்போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தேடப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி இரவு குறித்த மதுபானசாலைக்குச் சென்ற நால்வர் கொண்ட குழுவினர் மது அருந்தியுள்ளனர்.

முகாமையாளர் வைத்தியசாலையில்
இதன்போது, மதுபானத்திற்கான பணத்தை முகாமையாளர் கேட்டபோது, போதையில் இருந்த குழு முகாமையாளரின் அறைக்குள் புகுந்து மதுப்போத்தலால் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.