விசமிகளால் மண்ணியாகுளத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்: முறைப்பாட்டை கண்டு கொள்ளாத பொலிஸார்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த பனைமரங்களுக்கு தீ வைத்து எரித்து அழித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, மண்ணியாகுளத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான 24 ஏக்கர் வயலும், பனையும் சேர்ந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பனங் கூடல்களுக்கு தீ வைத்து அழித்ததுடன், சில பனைமரங்களை முற்றாக வெட்டியும் அழித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பனை அபிவிருத்தி சபை
காணி உரிமையாளருக்கு ஊர் மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து இது தொடர்பில் பனை அபிவிருத்தி சபைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அவர்கள் தங்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமில்லை எனக் கையை விரித்ததுடன், பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் அக்கராயன் பொலிஸில் கடந்த 29.08.2025 வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வடமாகாணத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்டங்களில் கூறிக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மவுனமாக இருப்பது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பனை மரங்கள் தமிழர் பகுதியின் கர்ப்பகதருகள். விடுதலை புலிகளின் காலத்தில் பனை மரங்ளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விசமிகளால் பயன்தரு பனைமரங்கள் எரிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக சமூக ஆர்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




 
                                        
                                                                                 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        