முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுரகுமார விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.
வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இரண்டாம் நாளாக இன்றும் (02) பங்கேற்க உள்ளார்.
உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில்16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கு இணையாக, வடக்கில் முதலாவது விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் தென்னை அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
அதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் களப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஊடாக, நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதோடு, இந்தப் பாலம் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாததால் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அது, 02 வழி புதிய பாலமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 1.4 பில்லியன் ரூபா பொதுமக்களின் வரிப்பணத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததார்.
அதேவேளை யாழ்ப்பாணம் கச்சதீவுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.