பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும் நெருக்கடி: ராணுவத்தினர் விடுத்த அதிரடி உத்தரவு?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் புதிய திருப்பமாக அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா (Qamar Javed Bajwa) உள்ளிட்ட நான்கு மூத்த ராணுவ ஜெனரல்கள் கூறியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டவும் புதிய திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். எனினும் பெரிய அளவில் முன்னேற்றேம் ஏற்படவில்லை.
இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ஆம் திகதி வாக்கெடுப்பு நடக்கிறது.
இதில் இம்ரான் கான் அரசுக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசு வெற்றி பெறும் என கருதப்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் தற்போது சொந்த கட்சி எம்.பி.களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர்.
ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்துள்ளது.
இதனிடையே இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24 எம்.பி.க்கள் சிந்து இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசை காப்பாற்ற பிரதமர் இம்ரான் கான் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய திருப்பமாக மார்ச் 22-23 தேதிகளில் நடைபெறும் ஓஐசி-எப்எம் மாநாட்டிற்குப் பிறகு ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.