முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை ரத்து செய்த நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. ரோயல்பார்க் கொலை குற்றவாளியின் பொதுமன்னிப்பே இவ்வாரு இரத்து செய்யப்பட்டுள்ளது.
ரோயல்பார்க் கொலையாளி டொன் சமந்த ஜீட் அந்தனி ஜயமஹவிற்கு ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின் கீழ் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடிப்படை உரிமை மனுவை தாக்கல்
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாமைக்காக ரோயல்பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட இரண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்புகளை நீக்குமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது.
மைத்திரி, மேற்படி பிரதிவாதிக்கு பொதுமன்னிப்பை வழங்கியவேளை மனுதாரரின் அடிப்படை உரிமைகளையும் பொதுநம்பிக்கை கோட்பாட்டையும் மீறியுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய சிறிசேனவின் தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டு அமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த தீர்ப்பை கருத்திற் கொண்டு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.