வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பு
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க ஏதுவாக சட்டத் திருத்தங்களைச் மேற்கொள்ள அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டத்தின் கீழ், இலங்கையில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை.
சட்டத் திருத்தம்
இருப்பினும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், வெளிநாடுகளில் வசிக்கும் தங்களது குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கும் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றும், அத்தகைய சட்டத் திருத்தம் இலங்கையிலும் காலத்தின் தேவையாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கான பொறுப்பு வழங்கப்படவுள்ளது.