அச்சத்தின் காரணமாகவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தினார்
நாடளாவிய ரீதியில் வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்களின் குரலை ஒருபோதும் முடக்க முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மக்களின் போராட்டத்தைக் கண்டு ஜனாதிபதி அஞ்சியுள்ளார். அதன் காரணமாகவே இவ்வாறான சட்டங்கள் ஊடாக போராட்டங்களை முடக்குவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் அரசாங்கத்துக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.
எனவே அவர்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்த்து மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.