ஏற்றுமதி சந்தையை நோக்கி இலங்கையின் இயற்கை விவசாய வளர்ச்சி
ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளின் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த இலங்கை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மேலும் நிலைத்தன்மை தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில்,
இந்த முடிவை இலங்கை எடுத்துள்ளது. உலகளாவிய நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, விவசாய பொருட்களை தமது சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனியார், நிலைத்தன்மை தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று கோரும் புதிய சட்டங்களை¸ ஐரோப்பிய ஒன்றியம் அமுல்படுத்த தயாராகி வருகிறது.
இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சந்தை அணுகலைப் பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே அதிகம் நம்பியிருக்க நிலை ஏற்படும்.
இலங்கையில் தற்போது சுமார் 20,000 விவசாயிகள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக சுமார் 70,000 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பயிர்செய்கையை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.