சிங்கராஜ வனப்பகுதியில் சீனப் பிரஜைகள் செய்த சம்பவம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பேரும் சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு வாழும் அரிய வகை உயிரினங்களைப் பிடித்து சேகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

விசாரணை
குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட 41 இனங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பிடித்தமை உள்ளிட்ட 143 குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நான்கு சீனப் பிரஜைகளும் தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 143 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்றம் அவர்களுக்கு மொத்தமாக 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
உலகின் முக்கியமான உயிர்ப்பல்வகைமைச் செறிவுமிக்க வனப்பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கராஜ வனப்பகுதியில், அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.