சொகுசு காரில் வந்து தம்பதிகள் கைவரிசை: சினிமாவை மிஞ்சிய சம்பவம்
அங்குருவாத்தோட்ட பிரதேசத்தில் சொகுசு காரில் வாடிக்கையாளர்கள் போல் வந்து மளிகைக் கடைகளில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை அங்குருவாத்தோட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அங்குருவாத்தோட்ட காவல் பிரிவுக்கு உட்பட்ட மளிகைக் கடை ஒன்றில் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி காணாமல் போயுள்ளன. சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, சொகுசு காரில் வந்த பெண் ஒருவர் கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பி பொருட்களைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

திருடிய பொருட்களில் சொந்தமாக மளிகைக் கடை
அது தொடர்பில் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், அங்குருவாத்தோட்ட காவல் நிலைய பொறுப்பதிகாரி அசங்க ராஜகருணா தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான வாகன எண்ணைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதியினர் அப்பகுதியிலுள்ள பல கடைகளில் இதே பாணியில் திருடியது தெரியவந்தது.
விசாரணையில் காரிலிருந்த 52 வயது ஆணும், 49 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், கேஸ்பேவ பகுதியில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கடை உரிமையாளர்கள் கவனமாக இருக்கும்போது சாதாரண வாடிக்கையாளர்கள் போல் பொருட்களை வாங்குவது போல நடித்து, அவர்களின் கவனம் சிதறும் நேரத்தில் இருவரும் இணைந்து பொருட்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு திருடப்படும் பொருட்களைத் தங்கள் சொந்தக் கடையில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே தங்கம் மற்றும் வாகன டயர்கள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களைத் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.