முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு யாழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாம் தற்போது எதிர்நோக்கி வரும் மரண அச்சுறுத்தல் குறித்து 2026 பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல்கள் காரணமாக நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு கடத்தப்பட்டமை
14 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னிலை சோசலிசக் கட்சி செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜயகொடவின் கூற்றுப்படி, இரு செயற்பாட்டாளர்களும் 2011 டிசம்பர் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.