எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டம் குறித்து பொய்ப் பிரசாரம் செய்கின்றன — பிரதமர்
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, 2027 வரவு செலவுத் திட்டம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் சமூகத்தில் ஆதாரமற்ற பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடுமையாகச் சாடியுள்ளார்.
2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் தனிப்பட்ட ரீதியான விமர்சனங்கள் மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் குறித்துத் தனது ஆழ்ந்த விசனத்தை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அடிப்படைச் சம்பளத்தை மூன்று கட்டங்களாக உயர்த்தும் திட்டத்திற்கு அமைய 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, வாக்குறுதியளித்தவாறே எதிர்வரும் 2027 ஜனவரி மாதம் மூன்றாம் கட்ட சம்பள உயர்வும் எவ்வித மாற்றமுமின்றி அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2027 ஜூலை மாதம் கிடைத்தவுடன், அந்த முரண்பாடுகளும் படிப்படியாகச் சீர்செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.