அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
நாட்டை திறம்பட ஆள முடியாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கம் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
மக்களை பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய அரசாங்கம். இன்று மலிவு விலையில் அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட வழங்க முடியாத நிலையை எட்டியுள்ளது. நாட்டில் உப்புக்கூட தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயற்பட வேண்டும். ஆனால், அரச நிர்வாகம் வீழ்ச்சியடைந்து, ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, மக்களால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தக்கூட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதே நேரத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளுந்தரப்பினர் வீழ்ச்சியடைந்துள்ளதால், அவர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்காமல், அழுத்தங்களை பிரயோகித்து தேர்தல்களை கட்டுப்படுத்த முனைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தை அழிக்கும் எந்த ஒரு வேலைத்திட்டத்திற்கும் இடமளிக்க மாட்டோம். மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்து, மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.