புதிய வரி திருத்திற்கமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும். அதேநேரம், இரண்டு அல்லது 3 மில்லியன் ரூபாய்களுக்கு இருந்த வாகனங்கள், 7 மில்லியன் ரூபாய் வரைக்கும் அதிகரித்துள்ளது. இறக்குமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான வரிகள் அமுலாக்கப்படுகின்றன.
இதன் காரணமாக வாகனங்களின் விலைகள் 160 முதல் 260 சதவீதம் வரையில் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பொதுமக்கள் தங்களது நிதிநிலைமைகளைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பானது தற்போதைக்கு குறைக்கப்படாது என்று அரசாங்கம் தங்களிடம் தெரிவித்திருப்பதாகவும் சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா கூறியுள்ளார்.
நாட்டிற்கு புதிய மகிழுந்து, முச்சக்கர வண்டி, உந்துருளி, பாரவூர்தி, பேருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்யும் டொயோட்டோ லங்கா, ஸ்டேன்டர்ஸ் மோட்டர்ஸ், யுனைட்டட் மோட்டர்ஸ், கியா மோட்டர்ஸ், டி.வி.எஸ் லங்கா, லங்கா அசோக் லேலண்ட், டேவிட் பீரிஸ் ஆகிய 24 நிறுவனங்கள் சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பிற்குள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.