ஆபரேஷன் கங்கா; உக்ரைன் எல்லைக்கு சென்ற இந்திய அதிகாரிகள்
ரஷ்யா போர் நடத்தி வரும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக, உக்ரைனின் எல்லையை ஒட்டிய நாடுகளுக்கு 4 அமைச்சர்களை மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.
தற்போது வரை 5 விமானங்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியா கொண்டு வந்துள்ளது. உக்ரைனில் விமானப் போக்குவரத்து தடை நீடிப்பதால், அங்கிருக்கும் இந்தியர்கள் ரயில் மூலமாக உக்ரைன் எல்லைப் பகுதிக்கும், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் கொண்டு வரப்படுகின்றனர்.
அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்தப் பணியில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக 4 அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மத்திய நகர்ப்புற வீட்டு வசதி, பெட்ரோலியத்தறை அமைச்சர் ஹர்தீப் புரி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ரொமேனியாவுக்கு செல்லவுள்ளனர்.
அதன்போது முன்னதாக மீட்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே. மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜிவ் கவுபா, வெளியுறவு செயலர் ஹர்ஷ வர்தன் ஷிரிங்களா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யா தனது தாக்குதலின் வீரியத்தை குறைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெறுகிறது.