மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
ஆனமடுவ - சிலாபம் பிரதான வீதியின் சங்கட்டிக்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு மோட்டார் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழந்த நபர் 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவம் இடம்பெற்ற நேற்று இரவு 7 மணியளவில் சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் இருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்ட சில நிமிடங்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. தீயினைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எந்த பலனும் அளிக்கவில்லை.
இந்த தீ விபத்தில் 60 வயதுடைய நபர் உயிரிழந்த நிலையில், 21 வயது இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸ் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.