தெஹிவளையில் ஒருவர் கொலை; 14 பேர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் ஒருவரை கொலை செய்து மற்றுமொருவரை காயப்படுத்தியமை தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறி, வான் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
படோவிட்ட மலையை சேர்ந்த தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தப்பிச் செல்ல முற்பட்ட போது தாக்குதல்
தெஹிவளை பகுதியில் உள்ள ஏசி பழுதுபார்க்கும் கடையொன்றிற்கு அத்துமீறி நுழைந்த இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் லொறியில் ஏற்றி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தாக்கப்பட்டதாகவும் குற்றம் நடந்த இடத்தைக் கழுவி சுத்தம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான விபரம்
களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய நபர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 14 பேரும் கிண்ணியா, நிலாவெளி, அவிசாவளை, களுத்துறை, பண்டாரகம, காலி, பேருவளை, கந்தளாய், ஹட்டன் மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 19 முதல் 99 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதோடு சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.