கோழிச் சண்டையால் விபரீதம் ஒருவர் மருத்துவமனையில்!
அளுத்கம பிரதேசத்தில் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததையடுத்து இரு வீட்டாருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவத்தில் ஒருவரை போத்தலால் குத்தியதாகக் கூறப்படும் நபரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போத்தலால் தாக்குதல்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெனிபெத்திகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்டவரது குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த கோழியை யார் வெளியே எடுத்து கிணற்றைச் சுத்தம் செய்வது என்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு தரப்பினருக்குமிடையே மோதலாக மாறி தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.