அமெரிக்காவில் மருத்துவ துறையில் சாதனை ; இலங்கையரான பேராசிரியர் பாலி புலேந்திரன் குழுவின் கண்டுப்பிடிப்பு
அமெரிக்கா கலிபோர்னியாவில், இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர்.
மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில் தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது.

பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு
வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை தூண்டி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை நீண்ட காலத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கச் செய்கிறது.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி பல மாதங்கள் வரை நீடித்த பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராசிரியர் புலேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கான முதற்கட்டச் சோதனைகளுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நிதி உதவி மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.
இது மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இலையுதிர்காலத்தில் ஒருமுறை இந்த நேசல் ஸ்ப்ரேயை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் , கொரோனா மற்றும் பொதுவான சளி போன்ற பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு பெற முடியும் எனவும் அவர் கூறினார்.