ஆலய திருவிழாவில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்!
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த்துடன் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கருணாரத்ன தெரிவித்தார்.
வாகனேரி திரௌபதி அம்மன் ஆலயத்தில் சடங்கு உற்சவம் இடம்பெற்று வந்த நிலையில் ஆலயத்தில் சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் வாகனேரியைச் சேர்ந்த குளத்துமடு நடராஜா ரமேஸ்காந்தன் (19) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த இளைஞனின் சடலத்தை பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் ரி.கருணாகரன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான கருணாரத்ன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.