உடல் எடையை குறைத்தால் ஒரு கோடி போனஸ்; எங்கே தெரியுமா?
உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள விடயம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
உடல் பருமன் என்பது தற்போது உலக அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவலாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம்
உடல் பருமனே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ளது. இதனால், உடல் பருமனை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த நிலையில்தான் உடல் பருமனை குறைக்க வித்தியாசமான முயற்சியை சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ்
கொழுப்பை குறைக்கும் அதாவது, உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என்று சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
குறைக்கும் ஒவ்வொரு அரை கிலோவிற்கும் சுமார் ரூ.6 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளது. சவாலில் வென்ற பிறகு, மீண்டும் எடை கூடினால் ஒவ்வொரு அரை கிலோ எடைக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுமாம்.
அதேசமயம் ஊழியர்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இன்ஸ்டா 360 என்ற நிறுவனம் இந்த சவாலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீன நிறுவனம் அறிவித்துள்ள இந்த சவால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.